தென்னிந்தியாவின் பழைய மற்றும் புனித நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் சென்னை நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. இந்த காஞ்சி க்ஷேத்திரம் முதல் ஆழ்வார்களில் ஒருவரான பொய்கை ஆழ்வாரின் அவதார ஸ்தலமாகும்.
காஞ்சி இந்தியாவின் 7 புனித நகரங்களில் ஒன்றாகும் - அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா); இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்: "அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::"
காஞ்சிபுரத்தில் காணப்படும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பு வாய்ந்த திவ்யதேசத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஒன்றாகும். ஸ்ரீ பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் தனது காட்சியையும், அருளையும் வழங்குகிறார்.
இத்தலத்தின் உத்ஸவர் ப்ரஹ்மதேவர் செய்த அஸ்வமேத யாகத்திலிருந்து தோன்றினார்
இந்த ஸ்தலத்தின் புஷ்கரணி "அனந்த சரஸ்" ஆகும், இது ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரில் உள்ளது.
முந்தைய கால மூல மூர்த்தி (மூலவர்) அத்தி வரதர் ஆவார்; அவர் பிரம்மாவினால் பிரதிஷ்டை செய்யப்பட்டார்; அத்தி வரதர் இந்த ஆனந்த சரஸ் புஷ்காரிணியின் உள் வைக்கப்படுகிறார். ஒவ்வொரு 40 வருடங்களுக்கும் ஒரு முறை இந்த புஸ்கரிணியிலிருந்து வெளியே எடுக்கப்படுகிறார். கடைசியாக, அவர் 2019ல் எடுக்கப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் தனது அருளை கொடுத்தார். மறுபடியும் இவரது சேவை 2059ல் கிடைக்கும்.
பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மர சிலையானது "ஸ்ரீ ஆதி ஹஸ்திகிரி நாதர்" என்று அழைக்கப்பட்டார். பிரம்மாவின் கட்டளைப்படி இந்த சிலையை தேவ லோக சிர்பி - விஸ்வகர்மா வடிவமைத்தார்.
மரத்தின் சிலை தொடர்ந்து வெளிப்பட்டால் அது கெட்டுவிடும் என்று பிரம்மா உணர்ந்தார். எனவே, அவர் அனந்த சரஸ் புஷ்கரணியின் கீழ் வைக்கப்பட்டு பின்னர் ஒரு மாற்று மூல மூர்த்தி நிறுவப்பட்டு அவருக்கு வழக்கமான பூஜைகள் செய்யப்படுகின்றன
இந்த ஆதி அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒரு முறை புஷ்கரணியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, சுமார் 45 முதல் 48 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த 48 நாட்களில் அவர் இரண்டு வகையான சேவைகள் (அதாவது) சயன கோலத்திலும் மற்றும் நின்ற கோலத்திலும் தனது சேவையை தருகிறார். இந்த பெருமாளின் தரிசனம் பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சேவையை வழங்குகிறார். அவருடைய ஆசீர்வாதங்களுடன், நிச்சயமாக நாம் அவருடைய தரிசனத்தைப் ஒரு முறையாவது பெறுவோம்.
ஆனால் இப்போதைக்கு, நீங்கள் இந்த காஞ்சி திவ்ய திவ்யதேசத்திற்கு சென்றால், குறைந்தபட்சம் இந்த அனந்த சரஸ் புஷ்கரணியின் படிக்கட்டில் உட்கார்ந்து உங்கள் பிரார்த்தனைகளை அவருக்கு அர்ப்பணிக்கவும்; அவர் நிச்சயமாக உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பார் மற்றும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் / செல்வத்தை அளிப்பார்.